என் மரணம்
என் மரணம்
என்னடா "என் மரணம்" னு தலைப்புல எழுதுறாளேன்னு தோணுதா? கொஞ்ச நாள் முன்னாடி வரை இதை பற்றி யோசிக்க பயமா இருந்துச்சு. அனா உண்மை என்னன்னா கவல படுறதுனாலயோ பயபடுறதுனாலயோ அத தடுக்க முடியாது னு புரிஞ்சுது.
அப்பா சொல்லுவாங்க, என்னைக்கு பொறந்தோமோ அன்னைக்கே நம்ம மரணம் நிச்சியம் ஆகிடுச்சுனு. இன்னும் சொல்லணும்னா நம்ம உயிர் ஒரு ஒழுகும் நீர் தொட்டி போல. நீர் குறைந்து கொண்டே போகும். முழுதாய் தீரும் அன்று நாம் இறக்கிறோம் என்று சொல்வார்கள். உண்மை தானே ?
சரி வேதனை பட்டு பிரயோஜனம் இல்லை அதனால் கொண்டாட முடிவு எடுத்துவிட்டேன். இன்னும் ஒரு படி மேலே போய் திட்டம் போட்டுவிட்டேன். இறந்த பின் என்ன நடந்தால் என்ன, நமக்கு தெரியவா போகிறது? அனால் இந்த திட்டத்தில் நியாயம் இருந்தால் செய்வதில் தடை ஏதும் இல்லை என்று நினைக்கிறன்.
முதலில் உறுப்பு தானம் செய்ய வேண்டும். இரண்டாவதாக மருத்துவ ஆராய்ச்சிக்காக கொடுக்க வேண்டும். ஜாதி, மதம் என்ற பெயரால் உலகத்தை நாசமாகியது போதும். மனிதனை நல்ல வழியில் நடத்த தேவைப்பட்ட கருவியே மதம். அதுவே மனித தன்மையை இழக்க செய்தால் அப்படி பட்ட ஒன்று வேண்டுமா என்ன? இறந்த பின்பு உடலை எரிப்பதோ புதைப்பதோ அனைவரும் சராசரியாக செய்வதே. என்றாவது மற்றவர்களுக்கு உபயோக படும் உடலை மண்ணோடு மண்ணாக மக்கி போக விடுகிறோம் என்று நினைத்தது உண்டா? இருந்தாலும் இறந்தாலும் நாம் வாழ்ந்த இந்த உலகத்துக்கு பயனுள்ளவளாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறன்.
இது தான் என் முடிவு....இல்லை இல்லை புதிய தொடக்கம். இறந்த பின்பு கல்லறை இல்லை என்ற என்ன? பலரின் உடலிலும் மனதிலும் நீங்காமல் வாழ்ந்துகொண்டே தான் இருப்பேன்.
என்றும் நட்புடன்,
- மித்ரா
Comments
Post a Comment