எது சுதந்திரம் ?
எது சுதந்திரம் ?
அப்பா அழகாய் சொல்லுவார்கள், சுதந்திரம் கொடுக்க பட வேண்டியது இல்லை மாறாக எடுத்துக் கொள்ள வேண்டியது என்று. இது இரு பாலருக்கும் பொருந்தும். யாராலும் யாருக்கும் கொடுக்க முடியாத ஒன்று. யாரோட சுதந்திரம் எதுவரை என்பதை அவர் அவரை தவிர வேறு யாரும் சரியாகக் சொல்ல முடியாது. முக்கியமான விஷயம், இது தனக்கு தானே எடுத்துக் கொள்ளும் முடிவு என்பதால் கண்ணை மூடிக்கொண்டு எது வானாலும் செய்ய முடியாது. ஒவ்வொரு செயலையும் நன்கு ஆராய்ந்து, அதாவது அதன் விளைவுகளை முன்பே புரிந்து, தேவைப்படும் வேளையில் எதிர்த்து நின்று பொறுப்புடன் மன தைரியத்துடன் எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தைப் பெற வேண்டும்.
பெண்களே, உங்கள் சுதந்திரம் என்பது, எதையும் ஆணுக்கு நிகராய்ச் செய்வது அல்ல. உங்களைத் தாண்டி பல பிரச்சனைகளுடன் இருபவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். மாறாக உங்களுக்குள்ளே ஒரு வட்டத்தைப் போட்டு அதை சுருக்கிக் கொள்ளாதீர்கள். அறிவு, கல்வி, தன் மதிப்பு, சுய ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுகாதாரம், வீரம் இப்படி உள்ள பல குண நலன்களில் உங்கள் சுதந்திரம் கொடி கட்டி பறக்க வேண்டும். உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கின்றன. அதை அடிமைத்தனத்தின் சுகத்தில் விரயம் செய்து விடாதீர்கள்.
ஆண்களே, உங்கள் சுதந்திரம் என்பது 'கேள்வி கேட்க ஒருவரும் இல்லை. என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நான் ஆண் 'என்று நினைப்பதிலும், செயல் படுவதிலும் அல்ல மாறாக பெண்ணை மதித்து சக மனுஷியாக நடத்துவது, சுய கட்டுப்பாட்டுடன் இருப்பது., பகுத்தறிவை வளர்த்துக் கொள்வது, சிற்றின்பங்களில் உள்ள நாட்டத்தை குறைத்துக் கொண்டு, முன்னேற்றப் பாதையில் உங்களையும், உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் வழிநடத்துவது என்று இன்னும் நிறைய விஷயங்களில் காட்டுங்கள் உங்களின் சுதந்திரத்தை. தன்னிச்சையாக, நல்ல முடிவு எடுத்து அதை வெற்றி பெறச் செய்து பாருங்கள். சுதந்திர காற்றை அனுபவிப்பீர்கள்.
இவள் யார்? இவள் என்ன சொல்லுவது? என்று யோசிக்கும் போது, பறிபோகும் உங்கள் சுதந்திரம். ஏனென்றால் அப்போது நீங்கள் தாழ்வு மனப்பான்மையில் அடிமைகளாக மாறிவிடுவீர்கள். இவள் என்ன சொல்கிறாள்? என்று சிந்திக்க ஆரமித்தீர்கள் என்றால், சுதந்திரத்தை நோக்கி அடி எடுத்து வைப்பீர்கள்.
சிந்தனையும் செயல்பாடுமே மாற்றத்தின் பிறப்பிடம்.
சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
சுதந்திரக் காற்றை சுவாசித்து, உலகை மாற்ற விதை போடுங்கள்.
என்றும் நட்புடன்,
- மித்ரா
Spelling mistakes doesn't matter ...the text u wanted to convey is well reached without any regrets💌
ReplyDeleteThank you so much...means a lot...
Delete